லேபிள்கள்

சனி, 17 செப்டம்பர், 2011

பிரிய சிநேகிதிக்கு


உயிராய்
இருக்கின்றேன்
சிநேகிதியே
நீ - நலமா?
உன்னவர்
நலமா?

என் விசுவாசங்களில்
உன் - திருமண
அழைப்பிதல்
மட்டும் - என்னோடு

தேசம்
கடந்து
போனாய்
நேசத்தையுமா?

காலமாற்றம்
நட்பையும்
நசுக்கி விட்டதா?

நட்பை
புரிய வைத்த
நட்பின்
சிற்பி - நீ
உன்னை - நான்
செதுக்கலாமா?

கீட்ஷின்
கவிதைகளுள்
முகம் புதைத்து
கரம் - பற்றியபோது
காதலா
இருந்தது?
நட்பல்லவா!
மறந்ததேன்
நண்பியே?

உன்
நெஞ்சில்
நிலைத்திருந்து
நிறம் மாறிப்போன
நியதியா - நான்

காலம்
கடக்கும் - கனிவாய்
உனக்கொரு
பதில் தரும்
காத்திரு - பின்
மடல் எழுது

காலங்காலமாய்


என்னவளே
நினைவுகளை
சுமந்து கொண்டு
நீ வந்திருந்தாயாம்
வந்திருப்பேன்
வாசலில் - சத்தியம்
இடறி விட்டது

நெஞ்சமே
கடைசி முறையாய்
நீ - தந்த
சர்க்கரைப்
பொங்களை விட
உன் வரவு
எனக்கு
இனித்தது
என்ன செய்வது
நாம்
சந்திக்காதிருப்பது
சமூகத்தின்
சம்பிரதாயமல்லவா?

பிரியமே
இறந்தது
காலங்கள்தான்
கனவுகளல்ல
நிசப்தமில்லா
உலகில்
நிதர்சனமான
அன்பு இது
காத்திருப்பதும்
கஷ்டமல்ல

மீறினால்
நாளை
நானும் - நீயும்
சந்திக்கலாம்
உன்
குழந்தைகளுடனும்
நம் - கனவுக்
குழந்தைகளுடனும்

சமாதானம்


இப்பொழுதே
நான்
பிறக்க வேண்டும்

இறைஞ்சலில்லா
நேசிக்கும்
நெஞ்சங்களின்
கொஞ்சலில்
இப்பொழுதே - நான்
பிறக்க வேண்டும்

ஆத்தா
பால் கொடுக்க
தாத்தா
வாரியணைக்க
றாத்தா
கொஞ்சி விளையாட
இப்பொழுதே - நான்
பிறக்க வேண்டும்

இம்சையை
அழிக்க வந்த
அவதார புருஷர் - போல
இப்பொழுதே - நான்
பிறக்க வேண்டும்

தீர்மானித்த
திகதிகள்
வர மறுத்தும் - வலுவாய்
இப்பொழுதே - நான்
பிறக்க வேண்டும்
உங்களால் ......




தமிழனாய்


கால்கள்
சுடுகின்றன
நிற்பதற்கு
நிழல் வேண்டும்

வன்முறை வெயில்
வாட்டிக் கொண்டிருக்கிறது
தேகம் - கறுத்து
சிதைந்து
போனேன் - நான்

நாய்களும்
முகர்ந்து பார்த்து
சீ..
மனித இறைச்சி

நீண்ட குழலில்
வாசம் செய்த
நீசனொன்று - என்
நெஞ்சில்
புகுந்த போது
இறந்து
போனேன் - நான்


வருவேனென்ற
வெண்புறா விருந்தாளி
வரவேயில்லை
இறந்து
போனேன் - நான்

எனக்கு
எம சபையில் - தீர்ப்பு
"மீண்டும்
தமிழனாய் பிற
நரகம்
அனுபவி"

ஓர் இரவில் .....


மழுங்கியது
கூர் பார்த்து
போடப்பட்டது
உறைக்குள்

மனித நேயம்
கைது செய்யப்பட்டு
தள்ளப்பட்டது
சிறைக்குள்

முழு நிலவு
வளர மறுத்து
ஒளிந்து கொண்டது
பிறைக்குள்

பிரார்த்தனைகள்..
வேண்டுதல்கள்...
ஜெபங்கள்...
எல்லாமே - நாட்சுவர்
அறைக்குள்

வந்த இரவு
வழி தவறி
புகுந்து கொண்டது
கறைக்குள்

இப்போதெல்லாம்
மனித - உயிரிருப்பது
துப்பாக்கி
ரவைக்குள்

நியதிகள்




ஒரு
எண்ணம் - இது
புதிய
திருப்பமென்று

இனி
இரட்சிக்கப்படுவோம்
என்ற
எண்ணமாய்
மாலைவரை - மகிழ்ந்திருக்க
காலையில்
கனவெல்லாம்
கவிழ்ந்திருக்கும்

இறந்து போன
இந்தக் கணம்
வரையிலும் கூட
நம்பிக்கையிருக்கிறது
இருந்தும்
நெஞ்சினுள்
நிறம் மாறிப்போன
நியதிகள்

வார்த்தைகள் தொடங்கி
வருடங்கள்
முடிகின்றன..
பட்டதென்னவோ
வேட்டுக்காயங்களும்
வெட்டுக்காயங்களும்
ஆனாலும்
அப்பாவி - நான்

வேறுபாடு - நீங்கி
வாழ்வில்
மாறுபாடு - வர
விழித்தே இருக்கின்றேன்
காண்பது
கனவாகக் கூடாது
என்பதற்காக

வார்த்தைப்
புழுதியில் - வேர்த்துப்
புரையோடிப்போன
நம்பிக்கையை
நம்பலாம் - நாளைவரை
நாளை மறுநாள்...?